கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு.. அமைச்சர் SP வேலுமணி ட்விட்டர் சர்வே

தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P. வேலுமணி ட்விட்டரில் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-8

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக மக்களின் மனநிலை மற்றும் அவர்களின் கருத்துக்களை அறிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P. வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில், பல்வேறு கேள்விகளுடன் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தினார். அதில் 48 மணி நேரத்தில் 795 பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். குறிப்பாக அதில் இடம் பெற்ற 5 கேள்விகளுக்கும் மக்களிடம் இருந்து நேர்மறையான கருத்துக்கள் இடம் பெற்றன.அதாவது கொரோனா வைரஸ் பற்றி உங்கள் உறவினர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் விழிப்புணர்வு செய்தீர்களா? என்ற கேள்விக்கு 94.8 சதவீதம் பேர் ஆம் என்றும், 2.1 சதவீதம் பேர் இல்லை என்றும், இருக்கலாம் என்று 3.0 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இரண்டாவதாக கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தினமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு அடிக்கடி கை கழுவுவதாக 88.8 சதவீதம் பேரும், வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிவதாக 90. 2 சதவீதம் பேரும், சமூக விலகலை கடைபிடிப்பதாக 90.2 சதவீதம் பேரும், தடுப்பு மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதாக 65.8 சதவீதம் பேரும், அரசின் ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைபிடிப்பதாக 86.8 சதவீதம் பேரும், பொதுவாக கருத்து கூறியவர்கள் 11.1 சதவீதம் பேரும், எதுவுமில்லை என்று 1.9 சதவீதம் பேரும் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு காலத்தில் எந்த மாதிரியான கஷ்டங்களை சந்திக்கிறீர்கள் என்ற கேள்விக்கு , உணவு கிடைக்கவில்லை என்று 4.4 சதவீதம் பேரும், மளிகைப் பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாக 19.6 சதவீதம் பேரும், வீட்டில் இருந்து வெளியே தங்கியிருக்கும் நிலை கஷ்டமாக இருப்பதாக 14.3 சதவீதம் பேரும், அவசரகால உதவிகள் கிடைக்கவில்லை என்று 6.7 சதவீதம் பேரும், பொதுப் போக்குவரத்து தடையால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக 13.1 சதவீதம் பேரும், பல்வேறு காரணங்களை கூறியவர்கள் 13. 2 சதவீதம் பேரும், எந்த சிரமும் இல்லை என்று 28.6 சதவீதம் பேரும், கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

நான்காவதாக உங்கள் மாநகரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களில் யாருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி கூறுவீர்கள் என்ற கேள்விக்கு, மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் என்று 79.6 சதவீதம் பேரும், தூய்மைப் பணியாளர்கள் என்று 75.8 சதவீதம் பேரும், கிருமி நாசினி தெளிப்பவர்கள் என்று 61.1 சதவீதம் பேரும், அம்மா உணவ பணியாளர்கள் என்று 39.7 சதவீதம் பேரும், மெட்ரோ குடிநீர் வழங்குபவர்கள் என 47.9 சதவீதம் பேரும், மற்ற பணிகள் என்று 15.6 சதவீதம் பேரும், யாருமில்லை என்று 6.8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் உருவாகியுள்ள இக்கட்டான சூழலில் உள்ளாட்சித் துறையின் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு உதவியாக இருந்தது என்றும் இதற்கான தங்களது மதிப்பீடு என்ன என்ற கேள்விக்கு , கொரோனா தடுப்பில் உள்ளாட்சித் துறையின் நடவடிக்கைகளுக்கு 68.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

மொத்தத்தில் 88 சதவீதம் முதல் 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அடிக்கடி கை கழுவுதல், சமூக விலகலை கடைபிடிப்பது, முகக் கவசம் அணிவது என்பதை கடை பிடிக்கிறார்கள். வீதிக்கு வீதி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது மட்டுமின்றி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் உள்ளாட்சித் துறையின் , உள்ளாட்சி வீரர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்று 94 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுவாக ஊரடங்கு ஆரம்பித்த மார்ச் 25 முதல் மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார் என்ற கருத்தும் அதிகமாக பகிரப் பட்டுள்ளது. ஊரடங்கு அமலுக்கு வரும் முன்பே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து , தனிப்பட்ட முறையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *