தமிழகத்தில் ஒரேநாளில் 580 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 5409ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் மேலும் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,409- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, மே-7

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்படி, தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் இருவர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,547 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 316 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 63 பேருக்கும், விழுப்புரத்தில் 45 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1,92,574 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 14,102 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 52 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 3,822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.

தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,332 ஆண்கள், 1,409 பெண்கள், 2 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *