முதல்வர் பழனிசாமி வீட்டில் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மே-7

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் விஐபி வீட்டு பாதுகாப்பு பிரிவில் சுழற்சி முறையில் ஆண் மற்றும் பெண் காவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 44 வயதான பெண் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் விடுமுறையில் சென்றிருந்த அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட இருக்கின்றன. முதல்வர் வீட்டில் பணியில் இருந்த காவலருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *