கருப்புச்சின்னம் அணிந்து போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சிகள்… மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு..

தமிழகத்தில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சியினர் கருப்புச்சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

சென்னை, மே-7

கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், நிவாரணம் – மீட்பு – மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமல், திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்து மே 7-ம் தேதி ஒருநாள் கருப்புச் சின்னம் அணிவோம்! என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து இன்று கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சின்னம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். கருப்புச் சட்டை, கருப்பு மாஸ்க் அணிந்தபடி சமூக இடைவெளியுடன் கையில் கருப்பு கொடியுடன் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அனைவருமே சமூக இடைவெளியை கடைப்பிடித்தவாறு விலகி நின்று இந்த முழக்கத்தை முன்வைத்தனர்.. திறக்காதே திறக்காதே.. திறக்காதே.. மதுக்கடைகளை திறக்காதே.. திறக்காதே திறக்காதே மக்கள் வாழ்வை சீரழீக்கும் மதுக்கடைகளை திறக்காதே என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அவர்களது வீடுகளில் இன்று கருப்புக் கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *