தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு.. அதிகாலையிலேயே குவிந்த குடிமகன்கள்..

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மாஸ்க், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு மதுபிரியர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. நீண்டநாட்களுக்குப்பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் உற்சாகத்துடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

சென்னை, மே-7

கொகரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், மதுபானக்கடைகள் மூடப்பட்டன. சுமார் 50 நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் இன்று முதல் அரசு மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்தது.

அதன்படி தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. கடைகள் திறந்ததும் மது பிரியர்கள் ஆர்வத்துடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
அவர்களை வரிசையாக நிறுத்தி அவர்களது ஆதார் அட்டைகளை சரி பார்த்து டோக்கன் வழங்கப்பட்டு மது வழங்கப்பட்டது.
கூட்டமாக மது வாங்குவதை தவிர்க்கும் வகையில் வயது வாரியாக பிரித்து வழங்கப்பட்டது. காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை 50 வயதுக்கு அதிகமானோருக்கு மது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு பிற்பகல் 1 மணியில் இருந்து 3 மணிவரை மது வழங்கலாம். 40 வயதுக்கும் கீழானவர்களுக்கு பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 5 மணிவரை மது விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருவோர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதால், வரிசையை ஒழுங்குபடுத்த தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரியை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால் மதுபானங்களுக்கான விலையும் குவார்ட்டருக்கு 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *