ஆந்திராவில் இன்னெரு போபால்?.. விஷவாயு கசிவால் முதல்கட்டமாக 8 பேர் மரணம்.. 1000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயுவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாகப்பட்டினம், மே-7

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில், எல்.ஜி பாலிமர்ஸ் என்கிற தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று காலையில் இந்த தொழிற்சாலையில் இருந்து ரசாயன வாயு கசிந்து வெளியேறி இருக்கிறது. தொழிற்சாலைக்கு வெளியே பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவிய ரசாயன வாயு அதிக அழுத்தத்துடன் வெளியேறியதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலையில் நடந்து சென்றவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஆந்திர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் மீட்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஷவாயு கசிவை நுகர்ந்த 8 பேர் அந்தந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றித் தகவல் அறிந்த காவல்துறையினர் 25 ஆம்புலன்ஸ்களை வரவழைத்து பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். மக்கள் பயத்தால் வீட்டில் உள்ள கதவு, ஜன்னல்களை அடைத்து வீடுகளுக்குள் முடங்கினர். பின்னர் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அப்பகுதியை சுற்றியுள்ள 5 கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஷவாயுவை நுகர்ந்த வீட்டு விலங்குகளான ஆடு, மாடு, நாய், பூனை, எலி உள்ளிட்ட பல ஆங்காங்கே வாயில் நுரை தள்ளியபடி விழுந்து உயிரிந்தன. இந்த விஷவாயுவை நுகராமலிருக்க முயற்சி செய்த பலர் கண்கள், வாய், மூக்கு உள்ளிட்டவற்றை மூடிக் கொண்டு சென்றதால், கிணற்றுக்குள், வடிகால்வாய்க்கால் உள்ளிட்டவற்றில் விழுந்து உயிரிழந்தனர். அதிகாலை நடைப் பயிற்சி செய்தவர்கள், வாகனங்களில் சென்றவர்கள் இந்த விஷவாயை நுகர்ந்த சில நிமிடங்களில் மயக்கமடைந்து விழுந்து வாயில் நுரை தள்ளி உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபால் நகரில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விஷவாயு கசிவில் ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர். அதுபோன்ற சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *