ஜூன் மாதமும் விலையில்லா ரேஷன் பொருட்கள்.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜூன் மாதமும் விலையில்லா ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, மே-5

இது தொடர்பான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை பின்வருமாறு ;-

“மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். என் தலைமையில் 14 முறை ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுவும் ஆலோசனை நடத்தியுள்ளன. 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தனைக் குழுக்களும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. துறைச் செயலர்கள் நியமிக்கப்பட்டு ஐஏஎஸ் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் மக்கள் பிரச்னைகளை அறிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு பிரச்னை என்றால், அவை உடனடியாக சரி செய்யப்படவுள்ளது. அந்தக் கட்டுப்பாட்டு அறையில் மருத்துவர்களும் உள்ளனர். அவர்கள் ஆலோசனை வழங்கவுள்ளார்கள். சென்னை மாநகராட்சியில் ஏதேனும் பிரச்னை இருந்தால் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். சென்னையில் வேகமாகப் பரவக் காரணம், அதிக மக்கள் எண்ணிக்கை கொண்டதுதான் காரணம். இதனால்தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. மக்கள் பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால்தான் பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுக் கழிப்பிடங்கள் சுத்தப்படுத்தப்படுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 3 முறை கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படுகிறது. நடமாடும் வாகனம் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று பரிசோதனை செய்யப்படுகிறது. ஒருவேளை அப்போது நோய் அறிகுறி இருந்தால், அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. சரியான நடவடிக்கை எடுத்ததன் காரணமாகவே தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஜிங் மற்றும் வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. சென்னையில் 4000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் 50 பரிசோதனை நிலையங்கள் மூலமாக நாள் ஒன்றுக்கு சுமார் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வளவு பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதால்தான் நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் பரிசோதனை மையங்கள் அதிகமாக இருக்கின்றன. பரிசோதனை செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி இருப்பவர்களை முன்கூட்டியே கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.

தமிழக மக்களுக்குத் தேவையான அனைத்தையும் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் சில தொழில்கள் தொடங்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களை வெளி ஊர்களுக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சொந்த ஊர் செல்ல விருப்பும் வெளிமாநில தொழிலாளர்கள், அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று அவர்களை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகிறது. இதற்காக ஏழு முதல் எட்டு வரையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இருந்து சுமார் 50 ஆயரம் வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு தங்கி பணியாற்றி வருகிறார்கள். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த தேதிகளில் ரயில்கள் இயக்கப்படும் என்று அவர்களுக்கு தனித்தனியாக அறிவுறுத்தப்பட்டு, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளும்.

நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவற்றை கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நியாயவிலைக் கடைகள் மூலம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அத்தியாவசியப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, ஜூன் மாதத்துக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருள்கள் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனால், வேண்டிக் கேட்டுக்கொள்வது நீங்கள் அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். காய்கறிக் கடைகளுக்கு என எங்கு சென்றாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதைப் பின்பற்றினால், கொரோனா தொற்றை எதிர்த்து வெல்லலாம்”.

இவ்வாறு முதல்வர் தனது உரையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *