இந்திய பிரதமர் -சீன அதிபர் சந்திப்பு: பேனர் வைக்க அனுமதி
சென்னை அக்டோபர்-03
இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபரின் தமிழக வருகையை வரவேற்று அரசு சார்பில் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் தமிழகத்தின் மாமலப்புரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பு வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. வர்த்தக உறவு, நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சட்டவிரோதமாக பேனர் வைக்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்திலும் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தது.
தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதிகோரி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வரவேற்பு பேனர் வைக்க அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு சார்பில் மட்டுமே பேனர் வைக்க வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் சார்பில் பேனர் வைக்கக்கூடாது என்றும் திட்டவட்டமாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பேனர்களை பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.