ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு – மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஜே.இ.இ (JEE ) தேர்வு ஜுலை 18, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், ஜே.இ.இ அட்வான்ஸ் (JEE advance) தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மே-5

2020-21- ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், உயர் கல்விநிறுவனங்களை மூட மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மார்ச் 28ம் தேதி அறிவித்தது.

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேரும், அதில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்கள் நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்று தெரியாமல் அரசின் உத்தரவை எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங், ஜேஇஇ மெயின் மற்றும் நீட் தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளார்.

இதன்படி நீட் தேர்வு நாடுமுழுவதும் வரும் ஜுலை 26ம் தேதி நடைபெறும். ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ மெயின் தேர்வுகள் வரும் ஜுலை 18, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றார். ஜே.இ.இ அட்வான்ஸ் (JEE advance) தேர்வு ஆகஸ்ட் மாதமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *