10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியீடு…அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்றும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு, மே-5

ஈரோடு சூரம்பட்டி அம்மா உணவகத்திற்கு இன்று காலை அரிசி மூட்டைகளை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது ;-

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நாள்தோறும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். 21 நாட்கள் புதிய தொற்று இல்லை. இதற்காக மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையாக உழைத்துள்ளனர். மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். ஊடகங்களுக்கும் நன்றி. அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் 17-ம் ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பின்னர் முதல்வர் அனுமதி பெற்று தமிழகத்தில் ஜூன் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்படும். பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியும் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *