கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய போலி சித்த மருத்துவர் தணிகாசலம் மீது அரசு அதிரடி நடவடிக்கை..!

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி மக்கள் மத்தியில் தவறான தகவலை பரவவிட்டு பொதுநலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட போலி சித்த மருத்துவர் தணிகாசலம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே-4

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. அதற்கு கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாதது தான் காரணம். உலகம் முழுதும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனாவிற்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இதற்கிடையே, ஆங்காங்கே சில மருத்துவர்கள் தாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம், கொரோனா வைரஸூக்கு தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக தகறான தகவலை பரப்பிவிட்டார்.

இந்நிலையில் கொரோனா குறித்து தவறான தகவலை பரப்பி, மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுவந்த போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர், சென்னை காவல்துறையிடம் புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், COVID-19 எனும் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பொது சுகாதாரத்துறை இயக்குநர், மருத்துவ இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரம் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் அனுமதி இன்றி தகவல் பரப்புதல் The Epedemic Diseases Act and Regulations பிரிவு 8-ன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடித்துவிட்டதாக மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாத சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் என்பவர் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை மூலம் தவறான செய்தியை பரப்பிவிட்டு வருகிறார்.

பொது மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் அவர் செயல்பட்டு வருவதால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அவர்களால் சென்னை காவல்துறையிடன் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *