குடிமகன்களுக்கு குட் நியூஸ்..தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு..

தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நோய் பரவல் கட்டுப்பாட்டு பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, மே-4

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-

கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக் கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது.
எனினும் மதுபானக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகளைத் திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகளை வரும் 7.5.2020 முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

எனினும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக் கடைகள் மட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டுத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.
மதுபானக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதைத் தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், மதுபானக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *