நாசகார திட்டங்களை கைவிடுங்கள்-மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை….

சென்னை, அக்டோபர்-03

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு முற்றாக கைவிட வேண்டும், மக்களின் அறப்போராட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு, திட்டங்களை செயல்படுத்த முனைந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு திட்டங்களை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழக மக்களின் கோரிக்கைகளை துச்சமாக அலட்சியப்படுத்தி வரும் மோடி அரசு, கடந்த மே மாதம் காவிரிப் படுகை பகுதிகளை இரு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளித்தது. இதன்படி பிரிவு 1 இல் விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும், பிரிவு 2 இல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைப்பதற்கு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் மற்றும் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் மோடி அரசு அனுமதி அளித்தது.

அதன்பின்னர் ஜூலை மாதம் திறந்தவெளி அனுமதி கொள்கையின் கீழ் தமிழகத்தில் நாகப்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டங்களில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்திட மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும் கடந்த ஜூன் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் – மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், கரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழகம் போராடி வரும் நிலையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேலும் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

இதன்படி கடலூர் மாவட்டத்தில் -2, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15, காரைக்காலில் 3, ஹைட்ரோ கார்பன் கிணறுகள் என மொத்தம் 20 கிணறுகள் 459 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திட தற்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய சுற்றுச் சூழல் துறையிடம் அனுமதிகோரி விண்ணப்பித்து இருக்கிறது.

காவிரி பாய்ந்தோடும் வளம் கொழிக்கும் வேளாண் பகுதிகளை பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலமாக அறிவித்து, பாலைவனம் ஆக்கும் நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு வருவதும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு கள்ளத்தனமாக துணை போய், தமிழகத்தை வஞ்சித்து வருவதும் கண்டனத்துக்கு உரியது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *