வரலாற்றிலேயே முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்..!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

மதுரை, மே-4

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். கொரோனா தடை உத்தரவு காரணமாக இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெறவில்லை. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டதால், திருக்கல்யாணம் மட்டும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் மீனாட்சி கல்யாணம் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. இந்த வைபவத்தை மீனாட்சியம்மன் கோயில் இணையதளமான www.maduraimeenakshi.org-ல் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இணையதளம் மூலம், பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, மீனாட்சி திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.

கோயில் தக்கார், இணை ஆணையர் உள்பட 25 பேர் மட்டுமே பங்கேற்றனர். 4 சிவாச்சாரியார்கள் மட்டுமே திருக்கல்யாண பூஜைகளை நடத்தினர். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் திருப்பூட்டுதலின்போது பெண்கள் தங்களது திருமாங்கல்யத்துடன் இணைந்துள்ள மங்கள நாணை பெருக்கிக் கட்டிக் கொள்வது மரபு. இதன்படி வீட்டில் இருந்தபடியே பெண்கள் மங்கள நாண் பெருக்கி்கட்டிக் கொண்டனர். முதல்முறையாக திருவிழா இன்றி திருக்கல்யாணம் நிறைவு பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *