பரிந்துரை கடிதம் வாங்கிய பெண்ணுக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்ட கடலூர் திமுக எம்பி..

கடலூர் லோக்சபா தொகுதி திமுக எம்பி ரமேஷிடம் பரிந்துரை கடிதம் வாங்கிய பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எம்பி ரமேஷின் வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

கடலூர், மே-3

கடலூர் எம்பி ரமேஷிடம் பரிந்துரை கடிதம் வாங்கிய பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எம்.பி. ரமேஷின் வீடு பண்ருட்டி போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ளது. எம்பி ரமேஷின் வீட்டிற்கு கடந்த 27ஆம் தேதி வந்த பெண் ஒருவர் தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அதற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான பரிந்துரை கடிதம் வேண்டுமென கேட்டுள்ளார். எம்பியும் அவருக்கு பரிந்துரை கடிதம் கொடுத்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தப் பெண்ணின் மகன் மற்றும் மருமகளுக்கும், உறவுக்காரப் பெண்ணுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அந்த பெண்ணுக்கு பரிந்துரை கடிதம் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷின் வீட்டிற்கு இன்று வந்த சுகாதாரத்துறை குழுவினர், அந்த வீடு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என அடையாளப்படுத்தி அதற்கான ஸ்டிக்கர் ஒட்டினர். மேலும் எம்பி ரமேஷ், அவருடைய ஓட்டுநர், அவருடைய உதவியாளர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி உள்ளனர். ஆபத்திற்கு உதவுவதற்காக பரிந்துரை கடிதம் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *