ஊரடங்கு காலத்தில் என்னென்ன பணிகளுக்கு அனுமதி, எவற்றுக்கு தடை? – தமிழக அரசு புதிய அரசாணை

தமிழகத்தில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் என்னென்ன பணிகளுக்கு அனுமதி, எவற்றுக்கு தடை என்பது பற்றி அரசாணையில் விளக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே-3

இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் தலைமையில் 02.05.2020 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படியும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், மாநிலம் முவதும் ஊரடங்கு உத்தரவு 04.05.2020 முதல் 17.05.2020 நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து (Except Containment Zones) இதர பகுதிகளில் கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units சென்னை மாநகராட்சி ஆணையரின் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவிகித பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT & ITeS) 10 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் (e-Commerce), ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம். உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம். அனைத்து தனிக் கடைகள் (Standalone and neighborhood shops) (முடி திருத்தகங்கள் அழகு நிலையங்கள் தவிர), ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார். கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள் (Home Care Providers), வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர், சென்னை மாநகராட்சியின் http://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே உரிய அனுமதி பெற்று பணிபுரியலாம். ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள் (Agro Processing) தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ATM, ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

அனைத்து இடங்களிலும் ஒவ்வொருவரும் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். கிருமிநாசினி மருந்துகளை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணித்து அந்தந்த நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும். ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடக்கூடாது. மேலும், அரசின் உத்தரவுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம். தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமான பணிகளுக்கும் பணிகளைத் தொடங்க http://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும். நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை நிறுவனத்தின் பிரத்யேக பேருந்துகள் / வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரவேண்டும். அந்த வாகனங்களில் 50 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தக்க தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புர தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை . மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவிகித பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம்.

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள், அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் பொது மக்களுக்கான விமான, இரயில், பொது பேருந்து போக்குவரத்து, டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா மெட்ரோ இரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள் போக்குவரத்து, தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும். அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளை பின்பற்றி, தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி, 06.05.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படும். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *