சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்.. முழு விவரம்..

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை மாநகர் பகுதிகளுக்கு பிரத்யேகமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை, மே-2

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு என தனித்தனியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்:-

• கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.

• அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.

• சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவிகித பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

• தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்: 10 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

• அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

• அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.

• உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.

• அனைத்து தனிக் கடைகள் (முடி திருத்தகங்கள்/ அழகு நிலையங்கள் தவிர), ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

• பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர், சென்னை மாநகராட்சி ஆணையர் / சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *