இந்த 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை.. வானிலை மையம் அறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, மே-1

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பக்காற்றும் வீசுவதால், வீடுகளிலேயே அடைபட்டுக்கிடக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேபோல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் இது தீவிரமடைந்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடமேற்கு திசை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் வரும் 5 ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் தெற்கு அந்தமான், தென் கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *