கவனம் மக்களே.. விதியை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாட்கள் தனிமை – சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னையில் விதியை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, மே-1

தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. சென்னையில் தற்போது வரை 906 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் விதியை மீறி தேவையின்றி வெளியே சுற்றினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். விதிகளை மீறும் கடை, நிறுவனங்கள், அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும். தனிமனித இடைவெளி இரு நபர்களிடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ; –

 • சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறினால் 100 ரூபாய் அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
 • விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், பஸ் தங்குமிடங்கள், ஆட்டோ நிலையங்கள் மற்றும் பொது அரங்குகள் ஆகிய இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
 • ஷாப்பிங் மால்கள், பொது பூங்காக்கள், தீம் பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள், திருமண அரங்குகள், வங்கிகள், ஏடிஎம்கள், நிதி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகை கடைகள், மருத்துவ கடைகள், பி.டி.எஸ் கடைகள், பால் சாவடிகள், பேக்கரிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் பிற கடைகள், சந்தை இடங்களில் அரிசி கடைகள், காய்கறி கடைகள் மற்றும் பழ கடைகள், சிக்கன் கடைகள் , மட்டன் கடைகள், மீன் கடைகள் மற்றும் அசைவ விற்பனையான பிற கடைகள் போன்றவற்றில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
 • அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள், ஹோட்டல், அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
 • அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆகிய இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
 • வேலை செய்யும் இடத்தில் கை கழுவும் வசதி மற்றும் சானிடைஸர் வசதி இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அறிவுறுத்தப்பட்டபடி சுத்திகரிக்கப்பட வேண்டும் மற்றும் சுத்தமாக வைக்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து நிறுவனங்களும் அடிக்கடி கை கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.
 • விதிகளை மீறிய கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும்.
 • ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 1% ஹைபோகுளோரைட் கரைசலையும், 2.5% லைசோலையும் கலந்து கிருமிநீக்கம் செய்யவேண்டும்.
 • 2 நபர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரத்தின் சமூக தூரம் இருக்க வேண்டும்.
 • வேலை செய்யும் மற்றும் வளாகத்திற்கு வருகை தரும் அனைத்து நபர்களும் கட்டாயமாக மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.
 • கட்டாயமாக நுழைவாயிலில் சானிடைஸர் வசதி வைக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு கை சானிடைஸர் பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *