முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.42 கோடி நன்கொடை – தமிழக அரசு தகவல்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.42 கோடி நன்கொடையாகக் கிடைக்கப்பெற்றுள்ளது என்று`தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, மே-1

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;-

தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இப்பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 20.4.2020 அன்று வரை, மொத்தம் 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 21.4.2020 முதல் 30.4.2020 ஆகிய பத்து நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:

அசோக் லேலண்ட் நிறுவனம் மற்றும் ஹிந்துஜா லேலண்ட் நிறுவனம் 2 கோடியே 75 லட்சம்
பதிவாளர், அண்ணாமலைப்பல்கலைக்கழகம் 1 கோடியே 65 லட்சத்து 14 ஆயிரத்து 67 ரூபாய்
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் 1 கோடியே 2 லட்சத்து 88 ஆயிரத்து 66 ரூபாய்
திரு. வி.ஆர் வெங்கடாசலம் 1 கோடியே ஒரு லட்சம் ரூபாய்
டி. வி எஸ் ஸ்ரீ சக்கரா லிமிடெட் 1 கோடி ரூபாய்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் 97 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்
சேஷசாயி பேப்பர் அண்டு போர்ட்ஸ் லிமிடெட் 62 லட்சம் ரூபாய்
ஜி.ஆர் தங்கமாளிகை 54 லட்சத்து 1 ஆயிரத்து 826 ரூபாய்
மேட்ரிமோனி டாட் காம் 50 லட்சம் ரூபாய்
வ.ஊ.சி துறைமுகம், தூத்துக்குடி 50 லட்சம் ரூபாய்
தமிழ்நாடு கோழி முட்டை பண்ணை விவசாயிகள் மற்றும் விற்பனை சங்கம் 50 லட்சம் ரூபாய்
மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்டம் 32 லட்சத்து 37 ஆயிரத்து 862 ரூபாய்
டி.வி.எஸ் சுந்தரம் 25 லட்சம் ரூபாய்
இன்கோசர்வ் நிறுவனம் 25 லட்சம் ரூபாய்

கடந்த பத்து நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 145 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 986 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 558 ரூபாய் ஆகும்.

இதுவரை பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பத்து லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும், சிறுகச் சிறுக சேமித்த தங்கள் பணத்தை மனமுவந்து அளித்த பொது மக்களுக்கும், தமிழக முதல்வர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஆதரவாக, தங்களது ஒரு நாள் ஊதியமான 110 கோடி ரூபாயை மனமுவந்து அளித்த தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், தமிழக முதல்வர் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இதைத் தவிர, லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் 4 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்; ரோட்டரி மாவட்ட ஆளுநர், சென்னை 3 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்; பெப்சிகோ நிறுவனம் மற்றும் ஸ்மைல் பவுண்டேஷன் சார்பில் திரிசூலம், திருநீர்மலை, அனகாபுத்தூர், பம்மல் மற்றும் பல்லாவரம் ஆகிய கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு முப்பது நாட்களுக்கு சுமார் 2 கோடி ரூபாய் செலவில், 2000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, அஸ்ட்ரா ஜெனிகா இந்தியா பிரைவேட் லிமிடெட் 96 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்; தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வாங்க; எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள்; ஆகியவற்றை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு முதல்வர் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *