மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த அனுமதி – முதல்வர் பதவி தப்பிய மகிழ்ச்சியில் உத்தவ் தாக்கரே..!

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்ட மேலவைத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவி தப்பியது.

மும்பை, மே-1

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு முறையே 105 மற்றும் 56 இடங்கள் என பெரும்பான்மை பலம் கிடைத்தது. ஆனால், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக இந்த கூட்டணி முறிந்தது. தொடர்ந்து, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைத்தது. மாநில முதல்வராக, கடந்த ஆண்டு நவம்பர், 28-ம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்று 5 மாதங்கள் ஆகியும் அரசியலமைப்பு விதியின்படி இன்னும் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது சட்ட மேலவை உறுப்பினரான எம்.எல்.சி.யாகவோ ஆகாமல் இருக்கிறார். இந்த மாத இறுதிக்குள் (மே 28) அவர் மேற்கண்ட இரண்டில் ஏதாவது ஒரு பதவிக்கு தேர்வாக வேண்டும். எம்.எல்.சி. தேர்தல் மூலம் தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள உத்தவ் தாக்கரே திட்டமிட்டிருந்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து, ஆளுநர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 2 எம்.எல்.சி. பதவிகளில் ஒன்றில் உத்தவ் தாக்கரேவை நியமிக்க கோரி கடந்த 9-ம் தேதி மாநில மந்திரிசபை, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அந்த பரிந்துரை மீது கவர்னர் முடிவு எடுக்கவில்லை. இது உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், சட்ட மேலவை தேர்தலை நடத்தக்கோரி ஆளுநர் கோஷ்யாரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் மேல் சபை தேர்தலை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால், மகாராஷ்டிரா முதல்வர் பதவியை இழக்கும் நிலையில் இருந்த உத்தவ் தாக்கரேவின் பதவி தப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *