திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: 7 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி, அக்டோபர்-03

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக ஆய்வாளர்கள் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளது லலிதா ஜுவல்லரி. காலை நேரத்தில் கடையை திறக்கும்போது, நகைகள் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பல கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.

ஜுவல்லரி ஷோரூம் முழுவதையும் சோதனையிட்டபோது, பின்பக்க சுவற்றில் துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருப்பது முதற்கட்டமாக தெரியவந்தது. இதனையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் முகமூடியை அணிந்து நகைகளை அள்ளிச்சென்றதும் பதிவாகி இருந்தது.

கொள்ளையர்கள் தங்கள் முகங்களை மறைக்க, குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் போன்ற முகமூடிகளை அணிந்து திருடியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், கொள்ளையர்கள் சுவற்றை துளையிட பயன்படுத்திய இரும்பு ராடு ஒன்று சிக்கியுள்ளது. இந்த இரும்பு ராடை கொண்டு தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க ஆய்வாளர்கள் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருச்சியில் உள்ள தனியார் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொள்ளையர்களின் பின்னணியில் யார் இருப்பது, இவர்கள் தனிநபரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கணக்கிடப்பட்டு வருவதாகவும், தோராயமாக 100 கிலோ அளவில் 50 கோடி மதிப்பில் இருக்கும் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *