கொரோனா தடுப்பு.. அரசு, தனியார் பள்ளிகளை ஒப்படையுங்கள்.. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை மாநகர எல்லைக்குள் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளை ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மே 2-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளையும் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல்-30

சென்னையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 138 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வரும் மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடையும் நிலையில் சென்னையில் இத்தகைய பாதிப்பால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். குறிப்பாக, கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 100 பேர் வரை செல்கிறது. இந்நிலையில் இன்று பாதிப்பு அதிகரிப்பால் மாவட்ட ஆட்சியருடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திடீர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பின் ஆணையர் பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியதாவது; சென்னை மாநகர எல்லைக்குள் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளை மே 2 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பள்ளிகளை அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. ஒவ்வொரு பள்ளிகளிலும் குறைந்தபட்சமாக 1,200 கொரோனா நோயாளிகளை தங்க வைக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் கொண்டு செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு சமூக இடைவெளி தொடர்பாகவும், கைக்கழுவுதல் தொடர்பான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *