தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு சான்சே இல்லை.. மருத்துவ நிபுணர் குழு திட்டவட்டம்

கொரோனா வைரஸ் உடனடியாக கட்டுக்குள் வராது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-30

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ நிபுணர் குழுவைச் சேர்ந்த பிரதீப் கவுர் கூறுகையில், தமிழகத்தில் தற்போதிருக்கும் சூழ்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை. படிப்படியாகத்தான் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று தமிழக அரசிடம் தெரிவித்துள்ளோம். சில இடங்களில் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த ஆலோசனை வழங்கியுள்ளோம். ஊரடங்கை தளர்த்தினாலும், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று நீண்ட நாட்களுக்கு நம்முடன் இருக்கும். கொரோனா வைரஸ் உடனடியாக கட்டுக்குள் வராது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள, தனிமனித இடைவெளி அவசியம். முகக் கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பரிசோதனையை அதிகரித்தால் நாம் அதிகளவில் கொரோனா பாதித்தவர்களைக் கண்டறிய முடியும். கடந்த வாரத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.புற்றுநோய், சிறுநீரகம் பாதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முறையாக சிகிச்சையை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதீப் கவுர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *