வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப புதிய இணையதளம்.. தமிழக அரசு அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-30

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 25.03.2020 முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும், அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தமிழ்நாட்டிற்குத் திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *