ஊரடங்கை நீட்டித்தால் பொருளாதாரம் பேரழிவுக்கு செல்லும் – ரகுராம் ராஜன் எச்சரிக்கை

ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்தால் பொருளாதாரம் சீரழிந்துவிடும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

டெல்லி, ஏப்ரல்-30

கொரோனாவால் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பல்வேறு பொருளாதார நிபுணர்களுடன் பேசி வருகிறார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் பொருளாதார பாதிப்பு குறித்து ராகுல் காந்தி ஆலோசித்தார்.

அப்போது ரகுராம் ராஜன் கூறியதாவது:-

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்து வருமானமின்றி இருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க உடனடியாக இந்தியாவுக்கு ரூ.65,000 கோடி தேவைப்படும். இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு ரூ.200 லட்சம் கோடி. இதில் ரூ.65,000 கோடிதான் ஏழைக்களுக்கு ஒதுக்கப்போகிறோம். இது பெரிய தொகை அல்ல. உள்நாட்டு மொத்த உற்பத்தியைக் கருத்தில் கொண்டு, அதைச் செய்ய முடியும். என்னைப் பொறுத்தவரை 3-வது அல்லது 4-வது ஊரடங்கு வந்தால் பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது நிதி மற்றும் பணமதிப்பு நமக்கு அளவானதுதான். எனவே, சிறந்த வழியில் பொருளாதாரத்தை நாம் எவ்வாறு மக்களுக்கு திறந்துவிடப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நாம் பொருளாதாரத்தை திறந்துவிடும் போது ஆங்காங்கே கொரோனா தொற்று பாதித்தவர்களின் வருகை இருக்கத்தான் செய்யும், அவர்களை நாம் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்து பொருளாதாரத்தை இயக்க வேண்டும்.

இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *