கொரோனாவால் இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க சிறப்புக்குழு – முதல்வர் உத்தரவு

கொரோனா நோய் தாக்கத்திற்குப் பின் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் ஜப்பான், தென்கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-30

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் வேளாண்மை, தொழில் உற்பத்தி உள்ளிட்ட பொருளாதாரச் செயல்பாடுகளை கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்திற்குப் பின்பு மீண்டும் முன்பு போலவே துடிப்புடன் இயங்க வைப்பதில் மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதியுடன் உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் கொரோனா நோய்ப் பரவல் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தால் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திச் செயல்பாடுகளைப் பரவலாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளான ஜப்பான், தென் கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடமாற்றம் செய்திட முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. இச்சூழலில், தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிக முதலீடுகளைச் செய்துள்ள நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அவர்கள் பிற நாடுகளிலிருந்து இடமாற்றம் செய்யும் தொழிற்சாலைகளை இங்கு ஈர்த்து, நம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் பணிகளை முடுக்கிவிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இவ்வாறு இடம் பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் தலைமையில் ‘முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக்குழு’ ஒன்றினை அமைத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இக்குழுவில் ஜப்பான், தென்கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சார்ந்த தொழில் கூட்டமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய தொழில் பூங்காக்களின் பிரதிநிதிகள்,தமிழ்நாடு அரசின் நிதி, பெருந்தொழில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் ஆகிய துறைகளின் செயலாளர்கள், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், வணிகவரித்துறை ஆணையர் ஆகியோர் இடம் பெறுவர்.

இடம்பெயர வாய்ப்புள்ள நிறுவனங்களைக் கண்டறிதல், அவர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு வழங்கவேண்டிய விரைவான ஒற்றைச்சாளர அனுமதிக்கான வழிமுறைகள், சிறப்பு சலுகைகள் மற்றும் அவர்களை ஈர்க்க வாய்ப்புள்ள தொழிற்பூங்காக்கள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை கண்டறிந்து விரைந்து செயல்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பணிகளை இந்த சிறப்புக்குழு மேற்கொள்ளும். இந்த சிறப்புக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை ஒரு மாதத்திற்குள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கும். தமிழ்நாட்டை சீரிய முன்னேற்றப் பாதையில் தளர்வின்றி தொடர்ந்து கொண்டு செல்ல மாண்புமிகு அம்மாவின் அரசு முனைப்புடன் உள்ளது. தொழில் வளர்ச்சியிலும், தொடர்ந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாட்டை ஒரு முன்னணி மாநிலமாக தொடர்ந்து நிலைநிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *