மாமல்லபுரத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு

சென்னை அக்டோபர்-02

அக்டோபர் 2-வது வாரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில், முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

பிரதமர் நரேந்திரமோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு அக்டோபர் 2வது வாரத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. அப்போது தலைவர்கள் இருவரும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், வெண்ணெய் பாறை, ஐந்துரதம் ஆகிய பகுதிகளை பார்வையிடுகிறார்கள். இதற்கான முன்னேற்பாடுகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் நிலையில், மாமல்லபுரம் நகரம், முழுக்க முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மாமல்லபுரம் முழுவதையும் தூய்மைபடுத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் பணிகளை தலைமை செயலாளர் சண்முகம் 2 முறை ஆய்வு செய்திருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடில், முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, காவல்துறை சட்டம் ஒழுங்கு இயக்குநர் ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், சீன தூதரக அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு பணிகள், ஆக்கிரமிப்புகள் அகற்றம், உட்கட்டமைப்பு சீரமைப்பு பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். தொடர்ந்து சீன அதிபரும், பிரதமர் மோடியும் பார்வையிடவுள்ள புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். புராதான சின்னங்கள் மற்றும் சிற்பங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.

மேலும் நடைபாதை, புல்தரை அமைக்கும் பணிகள், சிற்பங்களை இரவிலும் கண்டுகளிக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்விளக்குகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *