பாலிவுட்டுக்கு வந்த சோதனை..நேற்று இர்பான் கான், இன்று ரிஷி கபூர் மரணம்..

பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67.

சென்னை, ஏப்ரல்-30

பிரபல இந்தி நடிகர் ராஜ் கபூரின் 2-வது மகன் ரிஷி கபூர். 1970ஆம் ஆண்டு மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், 1973-ல் கதாநாயகனாக அறிமுகமானார். பாபி திரைப்படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் சேர்ந்து இவர் நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு கடந்த 2000ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் வெற்றிகளைக் குவித்தார். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர்.

இதற்கிடையில், 2018-ம் ஆண்டு ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், ரிஷி கபூருக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இத்தகவலை அவருடைய மகன் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார்.

ரிஷி கபூரின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று நடிகர் இர்பான் கான் மரணமடைந்த துயரத்தில் இருந்து மீளாத பாலிவுட் பிரபலங்களுக்கு ரிஷி கபூரின் மறைவு மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *