சோனியா பற்றி அவதூறு பேச்சு – அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீஸ் 12 மணிநேரம் இடைவிடாத விசாரணை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து இழிவான விமர்சனத்தை முன்வைத்த ரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் 1 2 மணிநேரம் இடைவிடாமல் விசாரணை நடத்தினர்.

மும்பை, ஏப்ரல்-28

மகாராஷ்டிராவின் பால்கரில் சாதுக்கள் இருவரை பொதுமக்கள் அடித்து படுகொலை செய்தனர். குழந்தை திருடும் கும்பல் என தவறாக கருதி பொதுமக்கள் சாதுக்களை அடித்து கொலை செய்தனர்.
இதனை தமது ரிபப்ளிக் டிவியில் விவாதித்த அர்னாப் கோஸ்வாமி, மவுலவி ஒருவர் கொல்லப்பட்டிருந்தால், பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டிருந்தால் எல்லோரும் மவுனமாக இருப்பார்களா?
காங்கிரஸ் இடைக்காலத் தலைவரான இத்தாலிய சோனியா மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பி அவதூறாக விமர்சித்தார். இதனால் கொந்தளித்த காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் அர்னாப் கோஸ்வாமி மீது போலீசில் புகார் கொடுத்தனர்.

இதனால் எந்த நேரத்திலும் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்படலாம் என்கிற நிலை இருந்தது. ஆனால் தம்மை கும்பல் ஒன்று தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி திடீரென புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்துடன் உச்சநீதிமன்றத்திலும் தம்மை கைது செய்யாமல் இருக்க முறையிட்டார் அர்னாப்.

இதனை ஏற்று அர்னாப்பை 3 வார காலம் கைது செய்யாமல் இருக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில் மும்பை போலீசார் அர்னாப் கோஸ்வாமியை நேற்று விசாரணைக்கு அழைத்தனர். நேற்று காலை முதல் இரவு வரை சுமார் 12 மணிநேரம் அர்னாப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்னாப், தாம் போலீஸ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *