ஜோதிகா பேசியதில் என்ன தப்பு? – நடிகர் சூர்யா விளக்கம்

தஞ்சை பெரிய கோவில் குறித்து நடிகை ஜோதிகா பேசியதில் எந்த தவறும் இல்லை என்று நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-28

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா சமீபத்தில் நடித்த நடந்த விருது விழாவில் ‘ராட்சசி’ திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். இந்த விருது விழாவில் ஜோதிகா பேசிய பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த நிகழ்ச்சியில், பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது. எல்லாருக்கும் கோரிக்கை, ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அவ்வளவு காசு கொடுக்குறீங்க. அவ்வளவு பராமரிக்கிறீங்க. கோவில் உண்டியலில் காசு போடுறீங்க, தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. நான் அந்த கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று பேசியிருந்தார்.

ஜோதிகாவின் இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு தரப்பினர் ஜோதிகாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் ஆதரவு கொடுத்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

‘மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து ‘சமூக ஊடக’ விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்‌. ஒரு விருது வழங்கும்‌ விழாவில்‌ எப்போதோ ஜோதிகா அவர்கள்‌ பேசியது, இப்போது ஊடகங்களில்‌ செய்தியாகவும்‌, சமூக ஊடகங்களில்‌ விவாதமாகவும்‌ மாறி இருக்கிறது.

‘கோவில்களைப்‌ போலவே பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ உயர்வாக கருத வேண்டும்‌’ என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, ‘சிலர்‌’ குற்றமாக பார்க்கிறார்கள்‌. இதே கருத்தை விவேகானந்தர்‌ போன்ற ஆன்மீகப்‌ பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால்‌, அது கடவுளுக்குச்‌ செலுத்தும்‌ காணிக்கை’ என்பது ‘திருமூலர்‌’ காலத்து சிந்தனை. நல்லோர்‌ சிந்தனைகளைப்‌ படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ இறைவன்‌ உறையும்‌ இடமாக கருத வேண்டும்‌ என்கிற கருத்தை, எல்லா மதத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌ வரவேற்கவே செய்கின்றனர்‌. ‘கொரானா தொற்று’ காரணமாக இயல்பு வாழ்க்கைப்‌ பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும்‌, எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும்‌, மகிழ்ச்சியையும் அளித்தது.

அறிஞர்கள்‌, ஆன்மீகப்‌ பெரியவர்களின்‌ எண்ணங்களைப்‌ பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்‌ கருத்தில்‌ நாங்கள்‌ உறுதியாகவே இருக்கிறோம்‌. “மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்கியம்‌’ என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌. தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர்‌ அவதூறு பரப்பும்‌ போதெல்லாம்‌, நல்லோர்கள்‌, நண்பர்கள்‌, ரசிகர்கள்‌ எங்களுக்கு துணை நிற்கிறார்கள்‌. முகமறியாத எத்தனையோ பேர்‌ எங்கள்‌ சார்பாக பதில்‌ அளிக்கிறார்கள்‌. ஊடகங்கள்‌ சரியான விதத்தில்‌ இச்சர்ச்சையைக்‌ கையாண்டன. ‘நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்‌’ என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச்‌ செய்கிறார்கள்‌. எங்களுக்கு உறுதுணையாக நிற்கும்‌ அனைவருக்கும்‌ எங்களின்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் சூர்யா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *