சென்னை கோயம்பேடு சந்தையில் 600 மொத்த கடைகளுக்கு மட்டுமே அனுமதி.. மாநகராட்சி அதிரடி

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்தம் உள்ள 3100 கடைகளில் 600 மொத்த விலை கடைகளை மட்டும் செயல்பட சென்னை மாநகராட்சி அனுமதித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-28

சென்னை கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வியாபாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். தற்காலிகமாக கோயம்பேடு, கேளம்பாக்கம் மற்றும் மாதவரம் பகுதிக்கு கோயம்பேடு சந்தை மூன்றாக பிரித்து அமைக்க நேற்று ஆலோசனை நடந்தது. ஆனால் வியாபாரிகள் கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா பரவினால் அவர்கள் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தை தற்காலிகமாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்தனர்.

இன்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று பங்கேற்ற 17 பேர் மட்டுமே இன்றும் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு சந்தையில் குறைந்த பட்சம் கடைகளையாவது அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மொத்தம் உள்ள 3100 கடைகளில் 600 மொத்த வியாபார கடைகளுக்கு மட்டுமே சென்னை மாநாகராட்சி அனுமதி அளித்துள்ளது. சில்லறை வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. காய்கறி வரத்து அதிகமானால் மட்டுமே மாதவரம் பகுதிக்கு சந்தை மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே லாரிகளில் இருந்து காய்கறிகளை இறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த முடிவுக்கு சிறு வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *