அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை 1 ம் தேதி வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு – தமிழக அரசு

மத்திய அரசைப்போல, தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல்-27

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைப்பதாக அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவதும் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நிறுத்திவைக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியதாவது;-

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஆண்டு ஜூலை 1 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. 2020 ஜன.,1 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வும் நிறுத்திவைக்கப்படுகிறது. இருப்பினும், அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பிற்காலத்தில் வழங்கப்படாது.

இந்த உத்தரவானது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், யுஜிசி மற்றும் அகில இந்தியா தொழில்நுட்ப கல்வி நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு மற்றும் அரச உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு டிப்ளமோ அமைப்புகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள், நூலகர்கள், வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், மதிய உணவு திட்ட ஊழியர்கள், குழந்தை நலத்துறை அமைப்பு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம பஞ்சயத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அரசு ஊழியர்களிளின் ஈட்டிய விடுப்பு சம்பளத்தை ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *