சென்னை கோயம்பேடு சந்தையை 3ஆக பிரிக்க வியாபாரிகள் எதிர்ப்பு – நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது குறித்து நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது.

சென்னை, ஏப்ரல்-27

சென்னை கோயம்பேடு வியாபாரிக்கு ஒருவருக்கும், கோயம்பேட்டில் சலூன் கடை வைத்துள்ள ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 2 பேரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் சமூக இடைவேளி கடைபிடிக்கவில்லை என புகார் வந்த நிலையில், மார்க்கெட்டை 3 ஆக பிரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சந்தையில் உள்ள 3,100 கடைகளையும் 3 பங்காக பிரித்து கோயம்பேடு, கேளம்பாக்கம், மாதவாரம் பகுதிகளில் சந்தைகள் நடத்த அரசு திட்டமிட்டது. அதற்காக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சந்தை வியாபாரிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வியாபாரிகள் சந்தையை 3 ஆக பிரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கேயம்பேடு மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் சந்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அப்போது பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும். ஊரடங்கு காலத்தில் ஒருநாள் கூட கோயம்பேடு சந்தையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றார்.

இறுதியில் கோயம்பேடு சந்தை இடமாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் நாளை காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *