ஊரடங்கு நீட்டிப்பா? – அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை

நாடு முழுவதும் மே 3-ம் தேதி முடியவுள்ள ஊரடங்கை நீட்டிப்பதா? தளர்த்துவதா? என்பது குறித்து பிரதமர் மோடி மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

டெல்லி, ஏப்ரல்-27

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவ தொடங்கியதால், ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், டெல்லியில் மே 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மேலும் சில மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிசா மாநிலங்கள் மே 3க்கு பின்னரும் ஊரடங்கினை தொடருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றும் என அறிவித்துள்ளன. தெலங்கானா மாநிலத்தில் மட்டும் ஊரடங்கை நீட்டித்து அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. பிரதமருடனான ஆலோசனைக்கு பின் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்ய அசாம், கேரளா மற்றும் பீகார் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் மீண்டும் ஆலோசனை நடத்தினார். அவருடன் உள்துறை மந்திரி அமித் ஷாவும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.

தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், நோய்த்தொற்றின் தாக்கம், பாதிப்புகள் ஆகியவை பற்றியும், ஊரடங்கை எப்படி விலக்குவது? கட்டுப்பாடுகளை எப்படி தளர்த்துவது? பொருளாதார நடவடிக்கைகளை எப்படி ஊக்குவிப்பது? என்பது குறித்தும் முதல்வர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

மேலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான நிதித்தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்றும் முதல்வர்கள் கேட்டுக்கொண்டனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் விவகாரம் தொடர்பாகவும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். மாநில நிலவரங்களை கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *