லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகைகள் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

திருச்சி, அக்டோபர்-02

திருச்சி லலிதா ஜுவல்லரியில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது. திருச்சி காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஜோசப் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் லலிதா ஜூவல்லரி ஷோரூம் உள்ளது. வழக்கமாக இன்று காலை ஊழியர்கள் கடையை திறந்தபோது நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் கை ரேகை நிபுணர்கள் ஷோரூம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது, பின்பக்க சுவற்றில் துளையிட்டு கொள்ளையர்கள் கடையின் உள்ளே நுழைந்திருப்பது தெரியவந்தது.

மூன்று தளங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால், அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கீழ் தளத்தில் உள்ள நகைகள் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நகைக்கடையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது கொள்ளையர்கள் 2 பேர் குழந்தைகள் விளையாடும் முகமூடியை அணிந்துகொண்டு கொள்ளையடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் கொள்ளையர்கள் யார், இவர்களின் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *