கொரோனா எதிரொலி: மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

மதுரையில் உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை, ஏப்ரல்-25

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற இருந்த சித்திரை திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறாது என கோவில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் தினமும் நடைபெறும். மே 4-ம் தேதியன்று காலை 9 .05 மணி முதல் 9.29 மணிக்குள், நான்கு சிவாச்சாரியர்கள் மட்டும் உரிய பாதுகாப்புடன் திருக்கல்யாண சம்பிரதாயங்களை நடத்துவார்கள். இந்த நிகழ்வினை கோவில் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மே மூன்றாம் தேதி திட்டமிடப்பட்டிருந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், உலகப்புகழ் பெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் ரத்தாகியுள்ளது பக்தர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. எனினும், மண்டூக மக ரிசிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் கோவில் பட்டாச்சாரியார்களால் கோவில் உட்பிரகாரத்தில் உரிய பாதுகாப்புகளுடன் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *