நிறுத்துங்க.. மு.க.ஸ்டாலினுக்கு S.P. வேலுமணி எச்சரிக்கை

உயிர் காக்கும் அரசின் பணிகளை முடக்க நினைக்கும் விஷமிகளை ஊக்குவிப்பதும் அவர்களுக்கு பின்புலமாக இருந்து அவர்களுக்காக குரல் கொடுப்பதுமான அருவருப்பான அரசியல் செய்வதையும் மு.க.ஸ்டாலின் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்

சென்னை, ஏப்ரல்-25

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை தடுக்கும் பணியில், இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கிறது. அதே போல் தமிழகத்தில் மாண்புமிகு முதல்வர் அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடத்தும் அம்மா ஆட்சியும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநகரம் முதல் குக்கிராமம் வரை தீவிப்படுத்தியதில் தமிழகம், மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எங்கள் கழக அரசுக்கு கிடைத்த மக்கள் ஆதரவை பார்த்து, பொசுங்கிப் போன பொறாமை பிடித்த எதிர்க்கட்சித் தலைவர் திரு. ஸ்டாலின், என்ன செய்வதென்று தெரியாமல், வாய்க்கு வந்ததை பேசுவதையும், கண்டதையும், காணாததையும் நினைத்து வெற்று அறிக்கை வெளியிடுவதை காலை கடமை போல வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்.

இந்த காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை மூலம் எவ்வளவு பணிகள் நடக்கின்றன, தேவைகள் என்ன போன்றவற்றை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து கண்காணித்து வருகிறேன்.

சென்னை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை எவ்வளவு தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்திருக்கிறேன் என்பதை மக்களும் அனைத்து ஊடகங்களும் அறிவார்கள். என்னை பற்றிய எந்த பொய்ச்செய்திகளுக்கும் எள்ளளவும் நான் கவலைப்படவேயில்லை.

ஆனால், பேரிடர் காலத்தில் விஷமத்தனமாக பொதுமக்களை அரசு நிர்வாகம் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு எதிராக திருப்பும் முயற்சியாக ஆதாரமற்ற செய்திகளை பரப்பும் நோக்கில் செயல்பட்டு வந்த ஒரு வலைதளத்தின் சமூக ஊடகப்பக்கங்களில் பதிவிட்டிருந்த அவதூறான விஷம செய்திகள் குறித்து மாநகராட்சி அரசு ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை அந்த வலைதள உரிமையாளர் மீது பேரிடர் கால சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வலைதளத்தின் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பார்வையிட்டபோது பேரிடர் சமயத்தில் அரசாங்கத்திற்காக உழைத்திடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களை அரசாங்கத்திற்கு எதிராக தூண்டிவிட்டு வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட வைப்பது போன்ற விஷமத்தனமான பொய்யான செய்திகளை குறிப்பிட்டிருந்ததால், இக்கட்டான இச்சூழலில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று மாநகராட்சி அரசு ஊழியர் ஒருவர் அந்த வலைதளத்தின் உரிமையாளர் மீது புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனக்கும் இந்த புகாருக்கும் சம்பந்தமில்லாத நிலையில் அப்படி ஒரு வலைதளம் இருப்பது கூட எனக்கு தெரியாத நிலையில் அரசியலாக்கி என்னோடு இந்த நிகழ்வை தொடர்புப்படுத்தி திரு. ஸ்டாலின் அவதூறு பரப்புவதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.

அரசு ஊழியர் ஒருவரின் புகாரின் பேரில் காவல்துறையின் நடவடிக்கைக்குள்ளாகியுள்ள சம்பந்தப்பட்ட வலைதள உரிமையாளருக்காக கருத்துச் சுதந்திரம் என்று குரல் கொடுக்கும் திரு. ஸ்டாலின், அவரை பற்றிய ஒரு கருத்துச் சித்திரத்தை ஒளிபரப்பியதற்காக ஒரே நாளில் பல வருடங்கள் பணி செய்த மூத்த செய்தி ஆசிரியர் உள்ளிட்ட ஊடகக்குழுவை இந்த இக்கட்டான தருணத்தில் அவருக்கு நெருக்கமான ஊடக நிறுவனம் அண்மையில் சர்வாதிகாரப் போக்கோடு நீக்கியபோது அது அவர்களது கருத்து சுதந்திரம் என்று குரல் கொடுத்தாரா இல்லையேல் ஒட்டுமொத்த தமிழக ஊடகங்களை அவரது கட்சியின் அமைப்பு செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி் அவர்கள் நா கூசும் விதமாக அருவருப்பாக விமர்சித்த போது பொங்கி எழுந்தாரா!?

இரவும் பகலும் பணியாற்றும் அரசு எது, சிறந்த முதல்வர், அமைச்சர்கள் யார் என்றும், பேரிடர் சமயத்தில் ஒட்டுமொத்த உலகமே ‘விலகியிரு’ என்று விழிப்புணர்வு செய்துகொண்டிருக்கும் போது ‘ஒன்றிணைவோம் வா’ என்கிற தன்னுடைய வெற்று விளம்பரத்தின் படப்பிடிப்பு காட்சிகளுக்காக தொகுதியில் நிவாரணம் தருவது போல நடித்துக்கொண்டிருந்தது யார் என்றும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

எதிர்க்கட்சி தலைவர் என்கிற மேலான பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எதை தின்றால் பித்தம் தெளியும் என்று எதற்கெடுத்தாலும் சுகாதார பேரிடர் போன்ற இக்கட்டான சூழலிலும் அரசு நிர்வாகங்களுக்கு எதிராக விஷமச் செய்திகளை தூண்டி விடுவதும் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு உறுதுணையாக உடனே வரிந்து கட்டிக்கொண்டு அரைவேக்காட்டு அறிக்கை வெளியிட்டு மலிவான அரசியல் செய்வதுமாக இருப்பது யார் என்பதனையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்!

மக்கள் மனங்களை வெல்ல முடியாத விரக்தியில் முடங்கி கிடக்கும் திரு. ஸ்டாலின், அரசியல் அறமற்று, அரைவேக்காடு அறிக்கைள் வெளியிடுவதயும் அரசு பணியாளர்களை பொய்யான பிரச்சாரங்கள் வாயிலாக மன உளைச்சலுக்குள்ளாக்கி மக்கள் பாதுகாப்பு மற்றும் உயிர் காக்கும் அரசின் பணிகளை முடக்க நினைக்கும் விஷமிகளை ஊக்குவிப்பதும் அவர்களுக்கு பின்புலமாக இருந்து அவர்களுக்காக குரல் கொடுப்பதுமான அருவருப்பான அரசியல் செய்வதையும் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்!

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *