நீட் தேர்வு முறைகேடு: மாணவர் இர்பான் அதிரடி நீக்கம்

அக்டோபர்-02

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த மாணவர் இர்பான் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த உதித்சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த புகாரின் பேரில் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.

அதன் அடிப்படையில் பல இடங்களில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மேலும் 3 பேரை நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த முகமது இர்பான் என்ற மாணவரை மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முஹம்மத் ‌ஷபியை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையறிந்த முகமது இர்பான் தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், மொரீசியஸ் நாட்டுக்கு தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் மாணவர் இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வருகிற 9-ந் தேதிவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இர்பான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மாணவர் முகமது இர்பான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுரையின் பேரில் இந்த நடவடிக்கையை தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி இயக்குநர் சீனிவாசராஜூ எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *