கொரோனா காலத்திலும் அரசியல் லாபம் தேடாதீங்க.. ஸ்டாலினுக்கு குட்டு வைத்த ஓ.பி.எஸ்.

கொரோனா பரவி வரும் இந்த நேரத்தில் அரசியல் இலாபம் தேடாமல் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் எதிர்க்கட்சித்தலைவர் நடந்து கொள்ள வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-24

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது ;-

முதலமைச்சர், பிரதமரை டெல்லியிலோ அல்லது சென்னையில் சந்திக்கும் போதெல்லாம் அளித்த கோரிக்கை மனுக்களிலும், பல கடிதங்கள் மூலமாகவும், 15-வது நிதிக்குழுவின் தலைவர் என்.கே. சிங் தலைமையில் சென்னைக்கு வந்த நிதிக்குழுவின் கூட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருக்கக்கூடிய ‘1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான்’ மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வு செய்யப்பட வேண்டும் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

இதை எல்லாம் மறைத்துவிட்டு, முதலமைச்சர் எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் வெறும் கடிதம் எழுதிவிட்டு அமைதி காத்திருந்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதிலிருந்தே அவருடைய மலிவான அரசியல் வெட்ட வெளிச்சமாகிறது.

அதுமட்டுமல்லாமல், 2020-2021-ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூபாய் 32,849 கோடி 15-வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசின் முயற்சியின் காரணமாகத்தான். இது கூடத் தெரியாமல், ஏதோ 15வது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வெறும் 1928.56 கோடி ரூபாய் தான் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்தத் தொகையான ரூ.1928.56 கோடி 2020-2021ஆம் ஆண்டிற்கான மத்திய அரசிடமிருந்து, மத்திய வரி வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடிய மொத்த பங்குத்தொகையான ரூ.32,849 கோடியிலிருந்து முதல் தவணையாகும். 20202021ஆம் ஆண்டிலேயே மீதமுள்ள தொகையை இன்னும் 13 தவணைகளில் பெறப்படும். 14வது நிதிக்குழு தமிழ்நாட்டிற்கு பரிந்துரைத்த பகிர்ந்தளிக்கக் கூடிய நிதியானது 4.023 சதவீதத்திலிருந்து, 15வது நிதிக்குழு 4.189 சதவீதமாக உயர்த்தி பரிந்துரை செய்தது. இந்த முயற்சியையும் அதனால் தமிழ்நாடு மக்களுக்கு ஏற்படும் நன்மையையும் மூடி மறைத்துவிட்டு, எதிர்க்கட்சித்தலைவர் அறிக்கை விடுவது விந்தையாக உள்ளது.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு காரணமாக ஏற்பட்ட மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, மத்திய வரிகளில் பகிர்ந்தளிக்கக்கூடிய நிதிப் பகிர்வில், மாநிலங்களின் பங்கினை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக 15-வது நிதிக்குழு குறைத்து பரிந்துரைத்துள்ளது. இது இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாகும். இந்த அடிப்படை தகவலைக்கூட அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் மத்திய வரிகளிலிருந்து மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியினை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக 15-வது நிதிக்குழு அறிக்கையில் குறைக்கப்பட்டிருக்கிறது என்று அரசியல் நோக்கத்தோடு அறிக்கை விட்டிருக்கிறார்.

மேலும், அவருடைய அறிக்கையில் ‘நிதிப்பகிர்விற்குப் பிறகும் வருவாய் பற்றாக்குறை சந்திக்கும் 14 மாநிலங்களுக்கு பரிந்துரைத்த மானியத்தில் கூட தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.4025 கோடி மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார். ஆனால், உண்மை நிலை என்னவென்றால், தமிழ்நாட்டிற்கு இதுவரை வருவாய் பற்றாக்குறை இருந்தபோதிலும், இதற்கு முன்பிருந்த எந்த நிதிக்குழுவும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை பரிந்துரைத்தது இல்லை. ஆனால் தற்சமயம் முதலமைச்சரின் தொடர் முயற்சியின் காரணமாகவும், அம்மாவின் அரசினுடைய வற்புறுத்தலின் காரணமாகவும் முதன்முறையாக 2020-2021-ம் ஆண்டிற்கு ரூ.4,025 கோடி வருவாய் பற்றாக்குறை மானியம் பரிந்துரை செய்யப்பட்டு முதல் தவணை பெறப்பட்டு உள்ளது. இதை அறியாமல் எதிர்க்கட்சித்தலைவர் தனது அறிக்கையில் தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டியுள்ளது மிகவும் வேடிக்கையாக உள்ளது, கண்டிக்கத்தக்கது.

கொரோனா தொற்று நோய் தடுப்பில் அம்மாவின் அரசு தீவிரமாக ஈடுபட்டு மக்களைக் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் ஆதாயம் தேடும் ஒரே நோக்கத்தில் தான் இம்மாதிரியான பழைய வி‌ஷயங்களைக் கிளறி அறிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நேரத்தில் அரசியல் இலாபம் தேடாமல் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் எதிர்க்கட்சித்தலைவர் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *