மே மாதமும் ரூ.1000 வழங்க முதல்வர் பரிசீலித்து வருகிறார் – அமைச்சர் கருப்பணன் தகவல்

தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருள்களுடன் நிவாரண நிதியாக மே மாதமும் ரூ.1000 வழங்க முதல்வர் பரிசீலித்து வருவதாக, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

பவானி, ஏப்ரல்-24

பவானி நகராட்சியில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.சி.கருப்பணன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : –

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதி ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் உணவுப் பொருட்கள் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோன்று, இந்த மாதமும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதல் நிதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணம் கிடைத்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக மேலும் ரூ.ரூ.1000 வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் நிதி கிடைத்தவுடன் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பரிசீலனை செய்து வருகிறார்.

தமிழகத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர். ஆட்சியில் இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆட்சியின் கஷ்டம் தெரிந்தால் இவ்வாறு பேசமாட்டார்கள். கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையிலும் விமர்சனம் செய்வது வேதனைக்குரியது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *