மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி, அக்டோபர்-02

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், அவர்களுடைய ட்விட்டர் பக்கத்திலும் காந்தியின் கொள்கைகளை பதிவிட்டு மக்கள் அதனை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அங்கு நடந்த பிரார்த்தனை கூடத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இதனையடுத்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரும் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் பாபுவுக்கு எனது அன்பார்ந்த அஞ்சலி. மகாத்மா காந்தி மனிதகுலத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அவரின் கனவுகளை நனவாக்கவும், இந்த பூமியை சிறந்ததாக மாற்றவும் நாங்கள் உறுதி ஏற்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். காந்தியின் பிறந்தநாள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி அடக்குமுறை, மதவெறி, வெறுப்பை வீழ்த்த அன்பு, அகிம்சையை நமக்கு போதித்துள்ளார் காந்தி என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் 115- வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர், குடியரசுத் துணை தலைவர், காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *