ராதாபுரம் தொகுதி: மறுவாக்கு எண்ணிக்கைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக்டோபர்-01

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற அப்பாவு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்துவிட்டனர். 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களையும் மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தும் வகையில் அந்த தொகுதியில் பதிவான 19,20,21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும், பதிவான தபால் வாக்குகளையும் வரும் அக்டோபர் 4 ஆம் தேதியன்று உயர்நீதிமன்ற தலைமைப்பதிவாளரிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *