தீபாவளிக்கு 10,940 சிறப்பு பேருந்துகள்….

சென்னை, அக்டோபர்-01

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 940 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8 ஆயிரத்து 310 பேருந்துகளும் இம்மாதம் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்து துறை எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

பண்டிகை காலங்களில் போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளவிருக்கும் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூறினார். இதேபோல் பிற ஊர்களிலிருந்து 8 ஆயிரத்து 310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை 6 ஆயிரத்து 145 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அமைச்சர் கூறினார். சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் 1 மையமும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் 1 மையமும் என மொத்தம் 30 மையங்கள் திறக்கப்படுகின்றன.

www.tnstc.com, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்ற பிரபல இணையதளங்கள் மூலமாகவும் அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றிய விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அலுவலர் உட்பட 18 பணியாளர்களுக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *