ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி, அக்டோபர்-01

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசும், காஷ்மீர் அரசும் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றியது. இந்த உத்தரவு அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, காஷ்மீர் தொடர்பான வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். காவே, சூர்யகாந்த ஆகியோர் இந்த வழக்கில் மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் அரசும் பதில் மனுத்தாக்கல் செய்தால்தான் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும். என்றனர். மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், 2 வாரங்களுக்குள் மத்திய அரசையும், ஜம்மு காஷ்மீர் அரசையும் பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் அதற்கு மேல் அவகாசம் தரக்கூடாது என்று வாதிட்டார்.

ஆனால், மத்திய அரசு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசும், காஷ்மீர் மாநில அரசும் பதில் மனுத்தாக்கல் செய்ய போதுமான அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினர்.

இதையடுத்து நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் அரசும் பதில் மனுத்தாக்கல் செய்யப் போதுமான கால அவகாசம் வழங்குதல் அவசியம். அப்போதுதான் விசாரணை நடக்க ஏதுவாக இருக்கும். ஆதலால் அடுத்த 4 வாரங்களுக்குள் ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகமும், மத்திய அரசும் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இவர்கள் பதில் மனுத்தாக்கல் செய்த அடுத்த வாரத்துக்குள் மனுதாரர்கள் பதில் அளிக்கலாம். வழக்கை வரும் நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *