கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அசத்தல்

சென்னை, அக்டோபர்-01

சென்னை கொடுங்கையூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உருவாக்கப்பட்ட தண்ணீரை, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடித்து அசத்தினார். இங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உடல்நலனுக்கு கேடு விளைவிக்காது என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கவே அவர் அந்த தண்ணீரை பருகியுள்ளார்.

சிங்கப்பூரைப் போன்று சென்னையில் எதிர் சவ்வூடு பரவுதல் முறையில், கழிவுநீரை சுத்திகரித்து   மாற்றி அதனை பயன்படுத்தும்  வகையில் கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய 4 இடங்களில் அதிநவீன  கழிவு நீர் சுத்திகரிப்பு  நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையங்கள்  அமைக்கும் பணிகளை விரைந்து  மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்காணிப்பில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் இணைந்து திட்டப்பணிகளை மேற்கொண்டன.  கொடுங்கையூரில் 9 ஏக்கர் பரப்பளவில், 348 கோடி ரூபாய் மதிப்பில் நாள்தோறும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 3ம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (TTRO) உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூரில் உள்ள கழிவுநீரகற்று வாரிய வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 3ம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்தார்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர்கள் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டனர். அப்போது,கழிவு நீர் எவ்வாறு சுத்திகரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது என்பதை அதிகாரிகள் அமைச்சர்களுக்கு விளக்கினர்.

கொடுங்கையூரில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் முதல்கட்டமாக தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்த அதிகாரிகள்,சுத்திகரிக்கப்பட்ட இந்த தண்ணீரை குடித்தால் உடல்நலனுக்கு கேடு கிடையாது என்று தெரிவித்தனர். இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருந்தபோது, அதனை கொடுங்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாங்கி குடித்தார்.

நீர்மேலாண்மை வலியுறுத்தப்படும் இக்கால கட்டத்தில்,நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உருவாக்கப்பட்ட தண்ணீர் மனிதகுலத்துக்கு அவசியமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.இதுபோன்ற சூழலில், நாட்டிலேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உருவாக்கப்பட்ட தண்ணீரை குடித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான் என்று சமூக ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உருவாக்கப்பட்ட தண்ணீர் மக்கள் குடிக்க உகந்தது என்று இஸ்ரேல்,சி ங்கப்பூர்  போன்ற நாடுகள் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *