மழைநீர் சேகரிப்பு திட்டம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது-முதல்வர்

சென்னை, அக்டோபர்-01

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், கே.சி. கருப்பணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது, மழைநீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது. மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதனை பின்பற்றி தீவிர நீர்வள ஆதார பாதுக்காப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு நீர் மேலாண்மை மிகவும் அவசியம்.

காவேரி டெல்டா பகுதிகளில் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் செறிவூட்டல், மறுசுழற்சி போன்றவற்றை பயன்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்க வழிவகை செயப்பட்டுள்ளது. கிராமங்கள் தோறும் குளங்களை சீரமைக்க 1250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 210 நீர் நிலைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரில் 2 அடியிலிந்து தற்போது 5 அடி வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இரண்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தற்போது நெம்மேலியில் 1250 கோடி மதிப்பீட்டில் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. கொடுங்கையூர் திட்டம் போல்  கோயம்பேட்டிலும்  45 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொடுக்கும் திட்டம் விரைவில் முடியும். இதனால் நாட்டிலேயே அதிகபட்ச கழிவு நீரை சுத்திகரிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்கும். நீர்த்தேக்கங்களிலிருந்து குழாய்கள் மூலம் மற்றொரு நீர்த்தேக்கங்களுக்கு குழாய்கள் மூலம் குடீநீரை கொண்டு செல்லும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு முதலமைச்சர் உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *