அமைச்சர் ஜெயக்குமாருக்கு துரைமுருகன் காட்டமான பதிலடி..!

அமைச்சர் ஜெயக்குமாரின் “திருவாய்”, நாலாந்தரக் கருத்துக்களின் “கூவமாக” மாறி வருவது என எதிர்க்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-13

இது தொடர்பாக துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு தி.மு.க.,தான் காரணம்” என்று பச்சைப் பொய்யை தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து விட்டுள்ள “அதிகாரப்பூர்வமற்ற முதலமைச்சரின் செய்தித் தொடர்பாளர்” அமைச்சர் திரு.ஜெயக்குமாருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இப்படிப் பேசுவதற்குக் காரணம், தனிமைப்படுத்தலின் விளைவோ என்னவோ யாமறியேன்! ஆட்சியின் நாட்கள் குறையக் குறைய திரு. ஜெயக்குமாரின் “திருவாய்”, நாலாந்தரக் கருத்துக்களின் “கூவமாக” மாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சருக்கு உரிய எந்தத் தகுதியும் இல்லாதவரிடமிருந்து இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதற்கு ஓர் இலக்கணம் என்றால், அது அமைச்சரின் இன்றையப் பேட்டிதான் !அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு, ஊடகங்களில் வெளியானதால் அதற்கு எதிர்க்கட்சியான தி.மு.கழகம் பொறுப்புடன் விளக்கமளிக்க வேண்டிய கடமை உள்ளது.

நோயைக் கண்டுபிடிக்கவே உபகரணம் இல்லை. ஆனால் போர்க்கால நடவடிக்கையில் அரசு செயல்படுகிறது என்பது நல்ல வேடிக்கை மட்டுமல்ல; தமிழக மக்களின் உயிருடன் அ.தி.மு.க. அரசு எப்படி விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை அது காட்டுகிறது. முகக்கவசம், வென்டிலேட்டர், என்-95 மாஸ்க், பி.பி.இ. உபகரணங்கள் எல்லாம் கையிருப்பு இருக்கிறது என்றால், நேற்று பிரதமருடனான காணொலிக் காட்சியில் கூட, இவை எல்லாம் வாங்குவதற்கு நிதி கேட்டது ஏன்? உபகரணங்கள் இல்லை என்பதுதான் உண்மை.

எங்கள் தலைவர் 16.3.2020 அன்று வண்ணாரப்பேட்டையில் போராடிய மக்களைப் பார்க்கப் போனதை உள்நோக்கத்துடன் குறை கூறுகிறார். உள்ளபடியே அமைச்சருக்கு நிதானம் இல்லை! கொரோனா பற்றிய அரசின் அறிவிப்பு வெளிவந்தவுடன் முதலில் கழக நிகழ்ச்சிகள் அனைத்தையும் 16 எல்லையோர மாவட்டங்களில் ஒத்தி வைத்தவர் எங்கள் தலைவர். வண்ணாரப்பேட்டைக்குச் சென்று அங்கு போராடுபவர்களிடம், “கொரோனா நோய்த் தொற்றுள்ள நிலையில் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுங்கள்” என்று மார்ச் 16-ஆம் தேதியே வலியுறுத்தியவர் எங்கள் தலைவர்.

“துண்டு” போட்டு பதவியைப் பிடிப்பதில் “நிபுணரான” திரு. ஜெயக்குமார் “கூவத்தூருக்கு”ப் பிறகு இப்போது முதலமைச்சரிடம் “துண்டு” போட்டு அமர்ந்துள்ளார். ஆகவே, பேட்டி என்ற பெயரில் தினமும் ‘மைக்’ முன்பு நின்று உளறிக் கொட்டி வருகிறார். நாடு முழுவதும் கொரோனா நோய் பரவிக் கொண்டிருந்த நேரத்தில் – குறிப்பாக கேரளாவில் அதிகரித்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு விழாக்களை நடத்தி – வாடகைக்கு அ.தி.மு.க.,வினரைக் கூட்டி வந்து வைத்துக் கூட்டம் போட்டது முதலமைச்சர்.

கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே அதனை அறிவியல்பூர்வமாக அணுகி, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மக்களிடம் வலியுறுத்தி வருபவர் எங்கள் தலைவர்.இன்று மக்கள் மத்தியில், அ.தி.மு.க.,வும் அதன் தலைமையிலான அரசும் கடுமையான விமர்சனத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளன. இந்தப் பேரிடர் காலத்திலும் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளும் பச்சை சந்தர்ப்பவாத நோக்கத்துடன் உள்ளடி அரசியலில்தான் அ.தி.மு.க. ஈடுபடுகிறது என்பது மக்களுக்குப் புரிந்துவிட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *