நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் பிரமாண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்: முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

சென்னை, செப்டம்பர்-30

இந்தியாவில் முதல் முறையாக, சென்னை கொடுங்கையூரில் ரூ.348 கோடி செலவில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (1.10.2019) திறந்து வைக்கிறார்.

பெருநகர சென்னையில் போதுமான குடிநீர் வீடுகளுக்கே வழங்க முடியாத நிலையில், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனை மாற்றி அமைக்கவும், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது.

சிங்கப்பூரைப் போன்று சென்னையில் எதிர் சவ்வூடு பரவுதல் முறையில், கழிவுநீரை சுத்திகரித்து மாற்றி அதனை பயன்படுத்தும் வகையில் கோயம்பேடு, கொடுங்ககையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய 4 இடங்களில் அதிநவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்காணிப்பில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் இணைந்து திட்டப்பணிகளை மேற்கொண்டன.

கொடுங்கையூரில் 9 ஏக்கர் பரப்பளவில், 348 கோடி ரூபாய் மதிப்பில் நாள்தோறும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 3ம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (TTRO) உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா, சென்னை கொடுங்கையூரில் உள்ள கழிவுநீரகற்று வாரிய அலுவலகத்தில் நாளை (01.10.2019) நடைபெறுகிறது. காலை 10.45 மணியளவில் நடைபெறும் விழாவில், துணை முதலமைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைக்கிறார்.

இந்த விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலமைச்செயலர் க.சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

காலநிலை மாற்றம், காலம் தவறிய பருவமழை, மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை நாடு முழுவதும் பெரிதாக தலை தூக்கியுள்ளது. நீர் மேலாண்மை அவசியமானது என்று வலியுறுத்தப்படும் நிலையில், கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது.

பல மாநில அரசுகள் இதுபற்றி கொள்கை அளவில் அறிவித்தாலும், ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்கு இன்னும் கொண்டு வரவில்லை. இந்நிலையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்குவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக அரசு, முதற்கட்டமாக சென்னை கொடுங்கையூரில் பிரமாண்டமான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கியுள்ளது. கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தில் இது மைல்கல் சாதனையாக அமைந்துள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கொடுங்கையூரில் இருந்து மணலியில் உள்ள பெட்ரோலிய பொருள்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு தொழிற்சாலைகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டால், தற்போது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க முடியும்.

சென்னை மாநகருக்கு தினமும் 50 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. அதே அளவுக்கு கழிவு நீரும் சேகரிக்கப்படுகிறது. இதனை சுத்திகரிக்கும் போது 80 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கிறது. கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து கடல் தண்ணீரை குடிநீராக்குவதற்கு ஆகும் செலவை விட கழிவு நீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் தயாரிக்க 50 சதவீதம் செலவு குறைவாக இருப்பதுடன், தண்ணீரும் நன்றாகவே இருக்கிறது.

இந்த நவீன முறையில் சுத்திகரிக்கப்படும் தண்ணீர்தான் சிங்கப்பூரில் குடிநீர் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *