சர்ச்சை வீடியோ வெளியிட்டு திமுகவை தெறிக்க விடும் மாரிதாஸ்

சென்னை ஆகஸ்ட் 27

திமுக பற்றி சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டுள்ள மாரிதாஸ் மீது சென்னை காவல்ஆணையரிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை திமுக விமர்சனம் செய்து இருந்தது. முதலில் ரத்து செய்யப்பட்டது தவறு என்று கூறிவந்த திமுக, பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டது. ரத்து செய்ததை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால், அதை அமல்படுத்திய விதம்தான் சரியில்லை என்று தனது நிலையை திமுக மாற்றிக் கொண்டு இருந்தது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பகிரங்கமாக அறிவித்து இருந்தது.

இதையடுத்து, டெல்லியில் கடந்த 22 ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. நாடாளுமன்ற திமுக தலைவரும், திமுக எம்.பி.,யுமான டி.ஆர். பாலு முன்னிலையில் டெல்லியில் போராட்டம் நடந்தது. 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதனிடையே, திமுகவையும், பாகிஸ்தானையும் இணைத்து பாஜகவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் மாரிதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், திமுகவின் போராட்டத்துக்கு பாகிஸ்தான் ராணுவத்துக்கு நெருக்கமாக கருதப்படும் ரேடியோ சேனல் மற்றும் டெய்லி பாகிஸ்தான் ஏன் ஆதரவு தெரிவிக்கின்றன. தி,க. மற்றும் திமுகவுக்கு ஆதரவாக டெய்லி பாகிஸ்தான் செய்தி வெளியிடுகிறது என்ற சந்தேகத்தை மாரிதாஸ் எழுப்பியுள்ளார். அந்த வீடியோவில் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள், அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் இருக்கும் தொடர்பு, காஷ்மீர் கட்சிகளுடன் திமுகவுக்கு இருக்கும் தொடர்பு என்று நீட்டித்து சென்றுள்ளார். மேலும், இந்த வீடியோவில், மே 7 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி மீதும் குற்றம்சாட்டியுள்ளார். 

இதையடுத்து மாரிதாசை ஆதரித்து ட்விட்டரில் இன்று காலை முதல் #ISupportMaridhas என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர். இவரை ஆதரித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அவருக்கு எதிரானவர்கள் #MentalMatidhas என்று பதிவிட்டு வருகின்றனர்.  திமுக குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது 505(2) of IPC and I.T. Act உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக்கோரி, கழக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்து இருப்பதாக திமுக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *